சினிமா

மெய்யழகனுடன் இணையும் விக்ரம்.. வெளியானது சீயான் 64 அப்டேட்!

96, மெய்யழகன் மூலம் மனதினை வருடிய பிரேம் குமாரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில் அவரது படம் குறித்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

மெய்யழகனுடன் இணையும் விக்ரம்.. வெளியானது சீயான் 64 அப்டேட்!
Vikram Teams Up with Meiyazhagan Director Prem Kumar for Chiyaan 64
கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக 96, மெய்யழகன் போன்ற படத்தினை இயக்கிய பிரேம் குமார்- விக்ரமுடன் இணையும் படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான, டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

சமீபத்தில் கூட யூடியூப் வலைத்தளத்தில் பிரபலமான வி.ஜே.சித்து இயக்கும் முதல் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 இயக்குனர்களுடன் கைக்கோர்க்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

சீயான் 64:

அந்த 10 இயக்குநர்களில் ஒருவரான பிரேம் குமார்- சீயான் விக்ரமுடன் தனது அடுத்த படத்திற்காக இணையவுள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சீயான் விக்ரம்- பிரேம்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது.

96, மெய்யழகன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், மீண்டும் பிரேம் குமாரிடமிருந்து ஒரு பீல் குட் திரைப்படம், அதுவும் விக்ரமின் அட்டகாசமான நடிப்போடு எதிர்ப்பார்க்கலாம் என ரசிகர்கள் தற்போது கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

சீயான் விக்ரமின் 63-வது திரைப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தினை மண்டேலா, மாவீரன் போன்ற படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இதுத்தொடர்பான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவுப்பெறும் தருவாயில் விக்ரமின் 64 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரமின் நடிப்பில் இறுதியாக திரையில் வெளியாகிய வீர தீர சூரன், தங்கலான் போன்ற திரைப்படங்களில் விக்ரமின் நடிப்பு பாராட்டைப் பெற்றாலும், படம் வசூல் ரீதியில் ஆட்டம் கண்டது குறிப்பிடத்தக்கது.