இந்தியா

குழந்தைகளுக்கான ஆதார்: 5 வயசு ஆயிடுச்சா? இதை மறக்காம செஞ்சிடுங்க!

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயலிழக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான ஆதார்: 5 வயசு ஆயிடுச்சா? இதை மறக்காம செஞ்சிடுங்க!
uidai urges mandatory biometric update for childrens aadhaar
ஆதார் எண், இந்தியாவிலுள்ள தனிநபர்களுக்கான அடையாள ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் வங்கி செயல்பாடுகள் மற்றும் புதிய மொபைல் எண் பெற என அனைத்து விதமான சேவை இடங்களிலும் நம்மிடம் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணினை கேட்கிறார்கள்.

இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஏழு வயதை எட்டியும் இன்னும் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்காத குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கு 'கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் (Mandatory Biometric Update - MBU)' பணியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை UIDAI மீண்டும் எடுத்துரைத்துள்ளது. இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் விவரங்கள் பின்வருமாறு-

--> ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யும்போது, அவர்களின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் தேவையான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு கைரேகைகள் மற்றும் கருவிழி பயோமெட்ரிக் விவரங்கள் ஆதாரில் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில் அந்த வயதில் இவை முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது என்ற காரணத்தினால் தான்.

--> தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு குழந்தை ஐந்து வயதை எட்டும்போது, அவர்களின் ஆதார் எண்ணில் கைரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படம் ஆகியவை கட்டாயமாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். இதனை தான் ‘கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்’ என அழைக்கிறார்கள்.

--> உங்கள் குழந்தையின் ஆதார் பயோமெட்ரிக்கினை 5 முதல் 7 வயதுக்குள் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஏழு வயதிற்குப் பிறகு அப்டேட் செய்தால், அதற்குக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

--> பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

--> UIDAI, இந்த 'கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்' பணிகளை நினைவூட்ட, குழந்தைகளின் ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு (SMS) குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது.

--> ஏழு வயதிற்குப் பிறகும் 'கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்' பணி முடிக்கப்படாவிட்டால், தற்போதுள்ள விதிகளின்படி ஆதார் எண் செயலிழக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வுகளுக்குப் பதிவு செய்தல், கல்வி உதவித்தொகை பெறுதல், அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுதல் போன்ற சேவைகளைப் பெறுவதில் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், குறித்த காலக்கட்டத்திற்குள் குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்குமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.