சினிமா

தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி.. பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு!

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி.. பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு!
தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி பூக்கி படப் பூஜையில் திரை பிரபலங்கள் பங்கேற்பு
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களைக் கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், 'ஓஹோ எந்தன் பேபி' பட நாயகன் ருத்ரா, ஒளிப்பதிவாளர் சக்திவேல், இயக்குநர் ராம் மகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே “பூக்கி”. அது கதைக்குப் பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு பூக்கி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெருவெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுகமாகி, ஜெயில், காரி, Miss Match (தெலுங்குப் படம்) உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கணேஷ் சந்திரா, இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சனையாக இருக்குகிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்துக் கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற அஜய் திஷன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத் தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், Bigg Boss சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

நாயகனாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் விஜய் ஆண்டனி, தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.