சினிமா

மீண்டும் இணையும் சசி - விஜய் ஆண்டனி கூட்டணி.. புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.

மீண்டும் இணையும் சசி - விஜய் ஆண்டனி கூட்டணி.. புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!
Sasi - Vijay Antony team up again
இசையமைப்பாளராக இருந்து 'நான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு, இயக்குநர் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மிகப்பெரிய வணிக வெற்றியையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற அப்படத்திற்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘நூறு சாமி’ என தலைப்பிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் டூ நூறுசாமி

’பிச்சைக்காரன்’ படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற "நூறு சாமிகள் இருந்தாலும்..." என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தற்போது, அதே பாடலின் ஒரு பகுதி புதிய படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்ததுடன், அதன் மூன்றாம் பாகத்தையும் அவரே இயக்கவிருப்பதாக முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில், சசியுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தயாரிப்பு மற்றும் நடிகர்கள்

‘நூறு சாமி’ திரைப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிகைகள் லிஜோ மோல் ஜோஸ் மற்றும் ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு முன்னதாக, ஜோஸ்வா சேதுராமன் இயக்கி வரும் ‘லாயர்’ படத்தில் நடித்து முடிக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டுள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.