சினிமா

'ஆபரேஷன் நும்கோர்' - நடிகர் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்!

'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

'ஆபரேஷன் நும்கோர்' - நடிகர் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்!
Actor Dulquer Salmaan's 2 luxury cars seized
பூடான் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, 'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் அதிரடி சோதனையில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடிகர்கள் வீடுகளில் சோதனை

சட்டவிரோத கார் கடத்தல் கும்பலுக்கு இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று பின்னணியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடி வரும் சுங்கத்துறை அதிகாரிகள், அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர்களான துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், நடிகர் அமித் சாகலக்கல் வாங்கிய கார் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துல்கர் சல்மான் கார் பறிமுதல்

பூடான் நாட்டின் வழியாக சொகுசு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உட்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத கார் கடத்தல் பின்னணி

பூடான் ராணுவத்தால் கைவிடப்பட்ட சுமார் 150 வாகனங்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 'லேண்ட் குரூசர்', 'பிராடோ' போன்ற சொகுசு கார்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

பூடானில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக விற்கப்படும் பழைய கார்கள், இமாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டு, போலியான ஆவணங்களுடன் ரூ.40 லட்சம் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இடைத்தரகர்கள் மட்டுமின்றி, சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்தக் கடத்தல் குறித்து கேரள மோட்டார் வாகனத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.