சினிமா

'மதராஸி' படத்தின் இரண்டாம் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படத்தின் 2வது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

'மதராஸி' படத்தின் இரண்டாம் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
Madharaasi Box Office Collection
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘மதராஸி’, கடந்த 5 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு காரணமாக, முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் வசூல் நிலவரம்

படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி, ‘மதராஸி’ தமிழகத்தில் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் ரூ.15 கோடி மற்றும் உலகளவில் ரூ.20 கோடி வரை வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நாளிலும் ரூ.11.75 கோடி வசூலித்துள்ள இந்தப் படம், மொத்தமாக ரூ.25.40 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மதராஸி’ திரைப்படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘அமரன்’ படத்தின் வசூலை விடக் குறைவாக இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனங்களும், ரசிகர்களின் வரவேற்பும்

சில இணைய விமர்சகர்கள் படத்தில் லாஜிக் குறைபாடுகள் இருப்பதாகக் கருத்து தெரிவித்தாலும், சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் இதை ஒரு சிறந்த ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாகப் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாசுக்கு 'கம்பேக்' படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படக்குழு விவரம்

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள ருக்மிணி வசந்த், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், சபீர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வித்யுத் ஜம்வால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.