சினிமா

ஓடிடியில் வெளியாகும் ‘மார்கன்’.. எப்போ தெரியுமா?

இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி வெளியான ‘மார்கன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் ‘மார்கன்’.. எப்போ தெரியுமா?
Maargan OTT Release
நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர், ‘சலீம்’, பிச்சைக்காரன், ‘திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், விஜய் ஆண்டனி நடிப்பில் ‘மார்கன்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லியோ ஜான் பால் இயக்கிய இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

‘மார்கன்’ படத்தை இயக்கிய லியோ ஜான் பால், 'அட்டக்கத்தி, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’, ‘மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

விஜய் ஆண்டனி நடிப்பில் முதல்முறை உலகம் முழுவதும் 1000 திரைகளில் வெளியான இப்படம், தமிழக பாக்ஸ் ஆபீஸில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் ஓரளவு வெற்றியை பெற்றுள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ‘மார்கன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் 25 தேதி அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் ‘மார்கன்’ படம் வெளிநாடுகளில் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.