சினிமா

மோகன்லால் வைத்திருந்த யானை தந்தந்திற்கான உரிமம் ரத்து.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோகன்லால் வைத்திருந்த யானை தந்தந்திற்கான உரிமம் ரத்து.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
License for elephant tusk owned by Mohanlal cancelled
நடிகர் மோகன்லால் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் யானைத் தந்தங்களை அவர் வைத்துக்கொள்வதற்காகக் கேரள அரசு வழங்கிய உரிமத்தை, இன்று உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் தொடக்கம் மற்றும் அரசு நடவடிக்கை

கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி, கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோதமாகத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வனத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு மோகன்லால் அப்போதைய கேரள வனத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கேரள அரசு, சட்டத்தில் திருத்தம் செய்து, 2015-ஆம் ஆண்டு மோகன்லாலுக்கு யானைத் தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் வழங்கி, தந்தங்களையும் அவரிடம் ஒப்படைத்தது. பிறகு, மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது, பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதை நிராகரித்தது.

உயர்நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு

கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை நாடினார். அதே சமயம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொருவர், தந்தங்கள் வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், மோகன்லால் தந்தங்களை வைத்துக்கொள்ள மாநில அரசு வழங்கிய உரிமம் சட்டபூர்வமானது அல்ல எனக் கூறி, 2015-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அரசின் உத்தரவில் நடைமுறைப் பிழைகள் இருப்பதாகவும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசாங்கங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மோகன்லால் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.