சினிமா

ஐ.டி. ஊழியர் கடத்தல் விவகாரம்.. நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.டி. ஊழியர் கடத்தல் விவகாரம்.. நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!
Actress Lakshmi Menon absconding
கேரளாவில் ஐ.டி. ஊழியர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனன் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள நடிகையை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி

கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில், ஐ.டி. ஊழியருக்கும் அவரது நண்பருக்கும், நடிகை லட்சுமி மேனனின் குழுவில் இருந்த சில பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டையைத் தொடர்ந்து, ஐ.டி. ஊழியரும் அவரது நண்பரும் காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்த நடிகை லட்சுமி மேனன் தலைமையிலான கும்பல், எர்ணாகுளம் வடக்கு பாலம் அருகே அவர்களது காரை வழிமறித்துள்ளது.

தாக்குதல் மற்றும் கடத்தல்

காரை வழிமறித்த கும்பல், ஐ.டி. ஊழியரைத் தாக்கி, அவரது காரில் இருந்து வெளியே இழுத்து, மற்றொரு காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. காரிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்திய அவர்கள், பின்னர் பரவூர் கவலா பகுதியில் அந்த ஐ.டி. ஊழியரை இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சோனாமோல், தங்களை எதிர் தரப்பினர் பீர் பாட்டிலால் தாக்கியதில் தனக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி போலீசில் எதிர் புகார் அளித்துள்ளார்.

லட்சுமி மேனன் தலைமறைவு

ஐ.டி. ஊழியரைக் கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்தாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகி உள்ளதால், அவரை போலீசார் தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘கொம்பன்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.