சினிமா

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்கள்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்கள்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
High Court issues interim stay
'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா நோட்டீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இளையராஜாவின் பாடல்களான 'இளமை இதோ இதோ..',' ஒத்த ரூபாயும் தாரேன்..' மற்றும் 'என் ஜோடி மஞ்சக் குருவி..' ஆகியவை பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து இளையராஜா தரப்பிலிருந்து படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தனது அனுமதியில்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக, அவற்றை உடனடியாகப் படத்தில் இருந்து நீக்கவும், இழப்பீடாக ரூ.5 கோடி வழங்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டது. அந்த நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதைப் படக்குழு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இதையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனது அனுமதியில்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்திற்கு (Copyright Act) எதிரானது. தயாரிப்பு நிறுவனம் யார் மூலமாக அனுமதி பெற்றதாகக் கூறுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் படத்தில் தனது பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.

இடைக்காலத் தடை உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று விசாரணைக்கு நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு குறித்துப் படத் தயாரிப்பு நிறுவனம் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.