சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு.. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி!

ஏ.வி.எம். சரவணன் மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு.. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி!
Film producer AVM Saravanan passed away
புகழ்பெற்ற ஏவி.எம். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (வயது 86) இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாகக் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மறைவு மற்றும் ஏவி.எம். நிறுவனத்தில் பங்கு

சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினை காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த ஏ.வி.எம். சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். இவரது உடல் ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள 3-வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவி மெய்யப்ப செட்டியாருக்குப் பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகனான ஏவி.எம். சரவணன் நிர்வகித்து வந்தார். ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இவர் தயாரித்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது என்றார்.

பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறனின் “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு என்றும், அந்தப் பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம். சரவணன் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார் என்றும், அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மற்றும் திரையுலகினரின் அஞ்சலி

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இரங்கல் செய்தியில், தமிழ் திரைப்பட உலகின் பெரும் தூண்களில் ஒருவரான ஏ.வி.எம். சரவணன் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது என்றும், அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கும், பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்குவதற்கும் அவர் செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த், விஷால், பார்த்திபன், சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.