சினிமா

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

உண்மையை உடைத்த எடிட்டர்.. இயக்குநர் ஷங்கரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Netizens criticizing director Shankar Regarding game changer movie
இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி பண்டிகையையொட்டி திரைக்கு வந்தது. பான் இந்திய படமாக வெளியான இந்த படம், தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியானது. படத்தின் மூலக்கதையினை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார்.

பாட்டுக்கு மட்டுமே 75 கோடி:

படத்தின் பட்ஜெட் சுமார் 400 முதல் 500 கோடி ரூபாய் என்றும், படத்தின் பாடல்களுக்கு மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வெளிப்படையாக அறிவித்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸீல் படுதோல்வி அடைந்தது. இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே என்பவர்களுக்கு, ஷாக் கொடுக்கும் வகையில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இப்படத்தில் எடிட்டராக பணியாற்றி பின்னர் விலகிய ஷமீர் முகமது.

படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம்:

ஷமீர் முகமது, பேட்டியொன்றில் இயக்குனர் ஷங்கருடன் பணிப்புரிவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், "ஆரம்பத்தில் கேம் சேஞ்சர் படத்தின் நீளம் 7.5 மணி நேரம் இருந்தது. அதை நான் 3 மணி நேரமாக குறைத்தேன். பின்னர் அது மற்றொரு எடிட்டரால் மேலும் குறைக்கப்பட்டது. ஷங்கர் சாரின் வேலை அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம். எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்ததால், நான் திட்டத்தின் பாதியிலேயே வெளியேறினேன்" என குறிப்பிட்டுள்ளார். இவரது பேட்டி தற்போது இணையதளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது.

திரைப்படம் தோல்வியானது குறித்து ஒரு பேட்டியில் ஷங்கர் கூறுகையில், இந்த படத்தின் மொத்த காட்சிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததாகவும், இறுதியாக 2 மணி நேரம் 45 நிமிடங்களாக கட் செய்யப்பட்ட போதும், எனக்கு திருப்தி அடையவில்லை என்றும் கூறியிருந்தார். கேம் சேஞ்சர் படத்திலிருந்து ஷமீர் முகமது விலகிய போது, ரூபன் தான் எடிட்டராக பணியாற்றினார்.

ஷமீர் முகமது கருத்தின் அடிப்படையில் நெட்டிசன்கள் இயக்குநர் ஷங்கரை கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். படத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காட்சிகள் எடுக்காமல், இஷ்டத்துக்கு படத்தை எடுத்து தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுளார் இயக்குநர் ஷங்கர் என ஒரு பயனர் கமெண்ட் அடித்துள்ளார்.

ஒருக்காலத்தில் எப்படியிருந்த ஷங்கர்?

1993 ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார். பிரம்மாண்ட மேக்கிங், புதுமையான கதைக்களம், புதிய தொழில்நுட்பங்கள் என தொடர்ந்து தன் படங்களில் ஏதாவது ஒன்றை வித்தியாசமாக மேற்கொண்டு வந்தார்.

ஜென்டில்மேன் படத்தினை தொடர்ந்து அவரது இயக்கத்தில் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என தொட்டதெல்லாம் ஹிட் என தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகின் மிக முக்கிய இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்தார் ஷங்கர்.

ஐ படத்தில் பெரும் உழைப்பை கொட்டியும் ரசிகர்கள் மத்தியில் படம் எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து வெளியாகிய எந்திரன் 2.0-வும் கலவையான விமர்சனத்தை பெற்றது. விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் ஒருபக்கம் இந்தியன் 2 , மற்றொரு புறம் கேம் சேஞ்சர் என இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வந்தார். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியுற்றதை தாண்டி இயக்குனர் ஷங்கர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.