சினிமா

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
Actor Srikanth appears at the ED office
போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த், இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் பின்னணி

கடந்த ஜூன் மாதம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உட்படப் பலரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11.5 கிராம் கொக்கைன், 10 கிராம் மெத், ஓ.ஜி. கஞ்சா மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கை விசாரித்த சில காவல்துறையினர் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அமலாக்கத்துறை விசாரணை மற்றும் ஆவணங்கள்

இவ்வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கை விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள நபர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அடுத்த கட்டமாக, நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. நடிகர் கிருஷ்ணா ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகி 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், முதல் சம்மனுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக ஆஜராகவில்லை. பின்னர், இரண்டாவது முறையாக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகி உள்ளார்.

குறிப்பாக, தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்தபடி கையில் பையுடன் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார். கடந்த ஒரு வருடமாக மேற்கொண்ட வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், ஐடி தாக்கல், யூ.பி.ஐ. பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஆவணங்களை அவர் விசாரணைக்காகக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, இந்த ஆவணங்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து அடுத்தகட்ட முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.