சினிமா

'புதிய பாதை எங்கு செல்லும் என்று பார்க்கலாம்'- தயாரிப்பாளராக உருவெடுத்தார் பாசில் ஜோசப்!

நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

'புதிய பாதை எங்கு செல்லும் என்று பார்க்கலாம்'- தயாரிப்பாளராக உருவெடுத்தார் பாசில் ஜோசப்!
Basil Joseph ventures into production
'கோதா', 'மின்னல் முரளி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் பாசில் ஜோசப், தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்களைக் கவர்ந்து, தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அவர் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பாசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்’ எனப் பெயரிட்டுள்ளார்.

முன்னணி நடிகராக வலம்வரும் பாசில்

இயக்குநராக மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் பாசில் ஜோசப் வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூக்ஷமதர்ஷினி’, ‘பொன்மேன்’, ‘மரணமாஸ்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும், இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புதிய பாதையில் பயணம்

இந்த நிலையில், தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள பாசில் ஜோசப், தனது புதிய முயற்சி குறித்து சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இதுவரை செய்யாத ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிக்கிறேன் – திரைப்படம் தயாரிப்பது. இது எங்கு கொண்டு செல்லும் என்று தெரியவில்லை. ஆனால், கதைகளை இன்னும் சிறப்பாகவும், தைரியமாகவும், புதிய வழிகளிலும் சொல்ல விரும்புகிறேன். இந்த புதிய பாதை எங்கு செல்லும் என்று பார்க்கலாம். பாசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உங்களை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாசிலுக்குத் வாழ்த்து தெரிவித்த நடிகர் டோவினோ தாமஸ், "முதல் படத்தில் நான் கதாநாயகன் கிடையாதா? என்று நகைச்சுவையாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.