சினிமா

ரஜினியை வைத்து படம்? இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்!

"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினியை வைத்து படம்? இயக்குநர் மாரி செல்வராஜ் ஓபன் டாக்!
Director Mari Selvaraj
தனது படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்டவை என்று கூறியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் ரஜினிகாந்த் தன்னை நம்பி வந்து படம் செய்ய முன்வந்தால், அவரது நம்பிக்கைக்கு ஏற்ற ஒரு சிறந்த படத்தை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவினர் கோவையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்தனர். இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ரசிகர்களுக்கு நன்றி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ், "என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள். இந்தப் படத்திற்கும் மக்கள் ஆதரவு நன்றாக உள்ளது. கோவை மக்களுக்கு என்னுடைய குழு சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

பாஜக தலைவர் கருத்துக்குப் பதில்

ஜாதி ரீதியான படங்கள் எடுப்பது சரியல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மாரி செல்வராஜ், "இது ஜாதி எதிர்ப்புப் படம். எனவே, அவர் அவ்வாறு சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்," என்று பதிலளித்தார்.

ரஜினிகாந்துடன் படம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்துப் படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலளித்த அவர், "என்னுடைய படங்கள் இவ்வாறுதான் இருக்கும். என்னுடன் வேலை செய்வது இவ்வாறுதான் இருக்கும் என்று என்னை நம்பி அவர் ரஜினிகாந்த் வந்தால், அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். அது போன்ற ஒரு சிறந்த படத்தை நான் எடுப்பேன்," என்று மாரி செல்வராஜ் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

ஜாதியும் விழிப்புணர்வும்

ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளதா அல்லது அரசு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் விரிவாகப் பதிலளித்தார்.

"ஜாதிகளை மாத்திரை போடுவது போன்று உடனடியாக காலி செய்துவிட முடியாது. ஜாதி என்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஒரு வாழ்வியல் முறையாக உள்ளது. இதனை மாற்றுவதில் நான் மட்டுமல்ல; அரசியல்வாதிகள், பல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் எனப் பலரும் ஜாதிக்கு எதிராக வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்று சினிமாவிலும் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்," என்று கூறினார்.

'மனிதர்களைக் கொன்றாலும் கேள்வி கேட்க மாட்டார்கள்'

அனைத்துத் திரைப்படங்களிலும் ஒரு விலங்கைக் குறிப்பிட்டு அதனை அழிப்பது அல்லது கொல்வது போன்று படம் எடுக்கப்படுவது குறித்தான கேள்விக்குப் பதிலளித்த அவர், "கமர்சியல் படங்களில் எவ்வளவு மனிதர்களைக் கொன்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், நான் சமூகத்தையும் உண்மையையும் வைத்துப் படம் எடுக்கிறேன். அப்போது மனிதர்கள் சாவது போன்று படம் எடுத்தால் அது என்னுடைய பொறுப்பு. அதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன," என்று விளக்கமளித்தார்.