சினிமா

துணை நடிகை அளித்த புகார்...பிரபல காமெடி நடிகர் மீது பாய்ந்த வழக்கு

பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புசட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துணை நடிகை அளித்த புகார்...பிரபல காமெடி நடிகர் மீது பாய்ந்த வழக்கு
நடிகர் காதல் சுகுமார்
காதல் சுகுமார் மீது புகார்

நடிகர் பரத், சந்தியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். இத்திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் காதல் சுகுமார். இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் கமலுடன் விருமாண்டி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக இருந்த காதல் சுகுமார் ‘திருட்டு விசில்’, ‘சும்மாவே ஆடுவோம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படங்கள் தோல்வி அடைந்ததையடுத்து, சுமார் 10 ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான், கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே பேசும்படியாக இருந்தது.

கொலை மிரட்டல்

இந்த நிலையில், நடிகர் காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக வடபழனியை சேர்ந்த துணை நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புகார் அளித்தார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் அப்பெண்ணிடம் காதல் சுகுமார் மூன்று வருடங்களாக பழகி வந்ததாக தெரிகிறது. குறிப்பாக அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுக, சிறுக சுமார் 7 லட்சத்திற்கு பணத்தை பெற்றதாக தெரிகிறது. மேலும் தர்காவுக்கு அழைத்து சென்று அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வது போல நடித்தும் பல வேலைகளில் நடிகர் சுகுமார் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் காதல் சுகுமார் ஏற்கனவே திருமணமானதை மறைத்து நாடகமாடியது அப்பெண்ணுக்கு தெரியவந்து, இது குறித்து கேட்டப்போது காதல் சுகுமார் அப்பெண்ணை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்பெண் ஏமாந்த பணத்தை காதல் சுகுமாரிடம் கேட்டப்போது, செக் கொடுத்து மோசடி செய்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் செக்கை கேட்டு வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும், இதனால் காதல் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

போலீசார் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில், காதல் சுகுமார் மீது மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, அடுத்தக்கட்டமாக அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.