Breaking news

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்

இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின.

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முப்படை அதிகாரிகள் கூட்டாக விளக்கம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் காய், ஏகே பார்தி, பிரமோத் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை

பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை, தீவிரவாதிகளை தான் குறிவைத்ததுதான் தாக்குதல் நடத்தப்பட்டது.நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது. பயங்கரவாதிகளின் நிலைகள்தான் இந்திய ராணுவத்தின் எதிரி. ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் நம் மீது தாக்குதல் நடத்தியது.

எல்லையை பாதுகாக்க அனைத்து வகையிலும் இந்திய ராணுவம் உறுதி பூண்டிருந்தது. மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் வீடியோவை வெளியிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது. ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் ட்ரோன் அழிப்பில் முக்கிய பங்காற்றியது. பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பாகும். பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டது. கராச்சி, லாகூர் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்

மேலும், உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் ட்ரோன் அழிப்பில் முக்கிய பங்காற்றியது. இந்திய வான் படையால் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட ராணுவம்.ஆபரேஷன் சிந்தூரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் பிரதான கேடயங்களாக செயல்பட்டன. இந்திய ராணுவத்தின் வான் தாக்குதல்கள் துல்லியமாய் செயல்பட்டதை விளக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும்,

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் மறித்து அழிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டது.தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இலக்குகள் துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் நமது தாக்குதல் நடத்தப்பட்டாலும் மிக துல்லியமாக பயங்கரவாத இலக்குகள் அழிக்கப்பட்டது. எல்லையில் உள்ள அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் தாக்கப்பட்ட தருணத்தில் இந்திய தளங்கள் பாதுகாப்பாக இருந்தன. எல்லையை தாண்டாமலேயே பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி

இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஏவுதளங்கள் தகர்க்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் உஷார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன வான் பாதுகாப்பு அமைப்பு நமது தாக்குதலால் செயலிழந்தது. பாகிஸ்தான் உடனான சண்டையில் இந்தியாவுக்கு பெரியளவில் சேதம் இல்லை.இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.முப்படைகளின் ஒருங்கிணைப்பால் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்தது” என விளக்கம் அளித்தனர்.