Breaking news

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
Anbumani Ramadoss removed from PMK
பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

பாமகவில் தந்தை - மகன் மோதல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு கட்சித் தலைவர் அன்புமணி உடனடியாக ஆட்சேபனை தெரிவித்ததில் இருந்து, இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. இதையடுத்து, கட்சியின் தலைவராகத் தானே இருப்பேன் என்றும், தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் அறிவித்தார். இந்த மோதலின் விளைவாக, இருதரப்பிலிருந்தும் பழைய நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கால அவகாசம்

மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 17 அன்று ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க அன்புமணியிடம் ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, இரண்டு முறையும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அதற்கான அவகாசம் முடிவடைந்தது.

அதிரடி அறிவிப்பு

கால அவகாசம் முடிந்த நிலையில், ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவை, சரியானவை என உறுதி செய்யப்படுகிறது. அன்புமணியின் செயல்கள் தலைமைக்குக் கட்டுப்படாத வகையில் உள்ளன. இதனால், பா.ம.க.வின் செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுகிறார். அத்துடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேலும், அன்புமணியிடம் பாமகவைச் சேர்ந்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.