ஆன்மிகம்

மேஷம் முதல் கன்னி வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான ராசிபலன் கணிப்பு

weekly horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான இந்த வார ராசிப்பலன்களை குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

மேஷம் முதல் கன்னி வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான ராசிபலன் கணிப்பு
weekly horoscope predicted by astrologer shelvi
மேஷம்

முடங்காத முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வரவு சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள், பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். கலை, படைப்புத்துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம். ஷண்முகனை வணங்குங்கள். சந்தோஷம் உறுதியாகும்.

ரிஷபம்

சிந்தனையை சிதறவிடாமல் இருக்க வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிலும் நேரடிக் கவனமும் நிதானமும் அவசியம். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் சீரான அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் தவிருங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். அரசு, அரசியல் துறையினருக்கு நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். கலை, படைப்புத் துறையினருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். காது, மூக்கு, தொண்டை, கண்கள், உபாதைகள் வரலாம். பெருமாளைக் கும்பிடுங்கள். பெருமைகள் சேரும்.

மிதுனம்

சொல்லில் கவனமாக இருந்தால், செயலில் வெல்லும் காலகட்டம். பணியிடத்தில் துணிவைவிட பணிவே நல்லது. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்பதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். ரத்த பந்தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழிலில் சட்டப்புறம்பின் நிழல்கூட படாமல் கவனமாக இருங்கள். அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். கலை படைப்புத் துறையினர் நிதானமாக இருங்கள். இரவில் தனியே செல்வதைத் தவிருங்கள். ரத்தநாளம், அலர்ஜி உபாதை வரலாம். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். வாழ்க்கை தழைக்கும்.

கடகம்

தளராத முயற்சியால் தடைகள் தகர்ந்திடக்கூடிய காலகட்டம். உங்கள் திறமை அதிகரிக்கத் தொடங்கும். பணியிடத்தில் நேரம் தவறாமை முக்கியம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும். சேமிப்பை உயர்த்துங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு வாக்கில் நிதானமும் செயலில் கவனமும் தேவை. செய்யும் தொழிலில் சீரான லாபம் தொடரும். கலை, படைப்புத் துறையினருக்கு ஆதரவு கிட்டும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். எலும்புத் தேய்மானம், அஜீரணம், தூக்கமின்மை வரலாம். ஆனைமுகனை வழிபட்டால், ஆனந்தம் அதிகரிக்கும்.

Read also: துலாம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வீயின் துல்லியமான இந்தவார ராசிபலன் கணிப்பு

சிம்மம்

திட்டமிட்டு செயல்பட்டால், தித்திக்கும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். அதேசமயம் பணிகளில் நேரடிக் கவனம் முக்கியம். மனம் விட்டுப் பேசினால், குடும்பத்தில் குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ற ஏற்றம் ஏற்படும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்துப் பாராட்டு மகிழ்ச்சி தரும். கலைஞர்கள், படைப்பாளிகள் எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள். வாகனத்தில் வித்தைகாட்டல் கூடாது. அடிவயிறு, நரம்பு, அல்சர் உபாதைகள் வரலாம். நரசிம்மரை வழிபட்டால், நல்லவை நடக்கும்.

கன்னி

வேகத்தைவிட விவேகத்தால் வெல்லவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. பிறரை நம்பி ரகசியங்களைப் பகிர வேண்டாம். கோப்புகளை பத்திரமாக வையுங்கள். இல்லத்தில் இன்சொல் முக்கியம். மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்கள். தம்பதியரிடையே மனம்விட்டுப் பேசுங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் சோம்பலைத் தவிருங்கள். அரசியல், அரசு சார்ந்தவர்கள், புறம்பேசுவோரை விலக்குங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு திறமை பளிச்சிடும். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். ஒற்றைத்தலைவலி, நரம்பு உபாதைகள் வரலாம். சக்கரத்தாழ் வாரை வணங்குங்கள். சந்தோஷம் பெருகும்.