Sankarapuram Mariyamman Temple Mulai Pari in Aadi Month 2024 : அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கூழ் வார்த்தல், பால்குடம் ஏந்துதல், தீமிதித்தல் என்று அனைத்து அம்மன் கோயில்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
பூமாதேவி அம்மனாக அவதரித்தது இந்த ஆடி மாதத்தில்தான். எனவேதான் இம்மாதம் அத்தனை சிறப்புகளை பெற்றிருக்கிறது. திருமணமாகாத பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிகளில் விரதமிருந்து அம்மனை வழிப்பட்டால் நல்ல மனவாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. மேலும் வீடுகளில் கூழ்வார்த்து அம்பிகையை வழிபட்டால் ஆண்டு முழுவதும் அம்மனை வணங்கியதன் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் காற்றும் மழையும் அதிகளவில் இருக்கும். காற்றை காளியும் மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துவதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த மாதங்களில் கூழ் வார்த்து வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில்
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி இன்று (ஆகஸ்ட் 14) காலை பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர் உட்பட பதினாறு வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோயில் முன்பு முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். பிரத்தியேகமாக மதுரையில் இருந்து வர வைக்கப்பட்ட முளைப்பாரிகளை 200க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் வைத்து சுமந்தபடியே, கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். உலக நன்மைக்காக முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: குமரக்கோட்டம் முருகன் கோயில் வெள்ளித்தேர் உற்சவம்; பரவசத்தில் மூழ்கிய பக்தர்கள்
ஆடி மாத பலன்கள்:
ஆடி மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது பெரும் நற்பலன்களைப் பெற்றுத் தருவதாகத் திகழ்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனித நதிகளில் நீராட இயலவில்லையா? கவலையே வேண்டாம். உங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளம், ஆறு போன்றவற்றிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட, 'கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' என்ற ஸ்லோகத்தை உச்சரித்துக்கொண்டே குளித்தால், புனித நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம். இதனால் நீங்கள் செய்த முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகுவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தில் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது என்பது மாங்கல்ய பலத்தைக் கூட்டுவதாகக் கூறப்படுகிறது.