Kumarakottam Murugan Temple in Kanchipuram : கோயில் நகரமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் பல்வேறு திருத்தலங்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளி தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி, தெய்வானை மற்றும் சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. உற்சவ முருகருக்கு வெள்ளை நிற பட்டாடை உடுத்தி கையில் வேல், மற்றும் சேவல் கொடி ஏந்தி தலையில் கிரீடம் தரித்து மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. அதே போல வள்ளி-- தெய்வானைக்கு கிளி பச்சை நிற பட்டாடை உடுத்தியும் ,அழகிய குண்டு மல்லிகளை கொண்டு செய்யப்பட்ட மாலையும் அணிவிக்கப்பட்டது.
மூன்று நிலைகளைக் கொண்ட இந்த வெள்ளித் தேரானது, கோயிலின் உள் பிரகாரங்களை சுற்றி வந்து தூப தீப ஆராதனை காட்டிய பின்பு கோயில் நிலைக்குத் திரும்பியது. இதைத்தொடர்ந்து, வெள்ளித் தேரில் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி தெய்வானை உடன் பல்வேறு வண்ண பட்டுடுத்தி வைரம் வைடூரியும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளித்தேரை பக்தர்கள் " அரோகரா அரோகரா " கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கினர்.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 14 - புதன் அருளால் யாருக்கு புகழ் கிடைக்கும்?
குமரக்கோட்டம் முருகன் கோயில் சிறப்புகள்:
காஞ்சிபுரத்தின் நடுநாயகத் தலமாக விளங்கும் இந்த குமரக்கோட்டம் முருகன் கோயில், அருணகிரிநாதர், வள்ளலார் என்று பல ஞானியர்கள் தொழுது, பாடிப் பணிந்த புண்ணியத் தலம் ஆகும். முருகப்பெருமானே இங்கு ஞானியின் வடிவில் அமர்ந்துள்ளதால், வாழ்வில் நிம்மதி, ஞானம், தெளிவு பெற வேண்டுவோர் இங்கு வந்து அமர்ந்து சற்று நேரம் தியானித்தால் போதும் எனக்கூறப்படுகிறது. தெள்ளிய ஞானம் பெற்று, தெவிட்டாத இன்பம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. சிவசக்தி மகிழ்ந்து கொண்டாடிய ஞானமூர்த்தியான முருகப்பெருமானின் தவ வடிவை காஞ்சிபுரத்தின் ராஜவீதியில் அமைந்திருக்கும் குமரக்கோட்டத்தில் கண்டு தரிசிக்கலாம். முருகருக்கு இருக்கக்கூடிய அறுபடை கோயில்களுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக குமரக்கோட்டம் முருகன் கோயில் விளங்குகிறது. மேலும் இக்கோயிலை கந்தபுராணம் அரங்கேறிய தளம் என்றும் கூறுகின்றனர்.