ஆன்மிகம்

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!
தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்
உலக புகழ்பெற்ற பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் பெருவிழா கடந்த ஒருவாரமாக விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்ற வருகிறது.

தினசரி அம்மனும் சுவாமியும் கைலாய பரவதம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம், அன்னவாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஆறாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலையில் சுவாமி பிரியாவிடை அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் புறப்பட்டு நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதனால் மாசி வீதிகளில் ஏராளமான மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தது. இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சாமி வீதி உலாவின் போது மதுரையில் சிறிது நேரம் மழை பெய்ததை தொடர்ந்து பொதுமக்கள் குடை பிடித்தவர் சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி வீதி உலா, வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளதால், லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என்று கருதப்படும் சூழலில், பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.