Kanchipuram Kamatchi Amman Temple : உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் சமீபத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. லட்சுமி -சரஸ்வதியுடன் காமாட்சி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்ககொடி மரத்தில் காமாட்சி அம்பாள் படம் பொறித்த கொடியை கோவில் ஸ்தானிகர்கள் ஏற்றி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து காலையில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் உற்சவர் காமாட்சி ராஜவீதிகளில் வீதியுலா வந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், வெள்ளையும் பழுப்பு நிறம் கலந்த பட்டாடைகள் உடுத்தி, தேகம் முழுவதும் தங்க வைர ஆபரணங்கள் சூடி, மகிழம்பு மாலை அணிந்து, பாண்டியன் கொண்டை கிரீடம் தரித்து காமாட்சியம்மன் காட்சியளித்தார்.
லட்சுமி- சரஸ்வதி தேவியர்களுக்கு ஊதா நிற பட்டாடைகள் உடுத்தி, திரு ஆபரணங்கள் சூடி, மல்லி உள்ளிட்ட வாசனை மிகுந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு முப்பெரும் தேவியர்களும் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு மிக ரம்யமாக காட்சியளித்தனர்.
இந்த சந்திர பிரபை வாகனத்தின் கீழே அமைக்கப்பட்ட தங்க மேடையில் சப்த கன்னிகள் உருவம் பதிக்கப்பட்டு அதன் மேல் முப்பெரும் தேவியர்களும் அழகாக காட்சியளித்தனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வணங்கி வழிபாடு நடத்தினர்.