ஆன்மிகம்

இந்தியாவிலேயே வேறு எங்கும் நடக்காத நிகழ்வு.. ஹரிஹரன் சந்திப்பு கோலாகலம்

பொன்னேரியில் நடைபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் நடக்காத நிகழ்வு.. ஹரிஹரன் சந்திப்பு கோலாகலம்
இந்தியாவிலேயே வேறு எங்கும் நடக்காத நிகழ்வு.. ஹரிஹரன் சந்திப்பு கோலாகலம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத ஹரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. பொன்னேரியின் மையப்பகுதியில் ஆரணி ஆற்றங்கரையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஹரியும் ஹரனும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதத்தில் சந்திப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.

இத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் கருடோற்சவத்தின் 5-ஆம் நாளின் முக்கிய நிகழ்வான இந்தியாவிலேயே வேறு எங்கும் நடைபெறாத ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சந்திப்பு திடலான ஹரிஹரன் கடைவீதிக்கு வந்தடைந்தார்.

இதே நேரத்தில் ஹரிகிருஷ்ண பெருமாள், ஆலயத்திலிருந்து புறப்பட்டு கருட வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து மேளதாளம் முழங்க அங்கு வந்து சேர்ந்தார். அப்போது கண்ணை கவரும் விதத்தில் வான வேடிக்கை நடத்தப்பட்டது. விழாவின் உச்சகட்டமாக ஹரியும் ஹரனும் பக்தர்களுக்கு ஒன்றாக காட்சியளித்தனர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா.. கோவிந்தா' கோஷமும் 'நமச்சிவாய.. நமச்சிவாய' கோஷமும் விண்ணை பிளக்கும் வகையில் அதிர்ந்தது. பக்தர்கள் பெருமாளையும், சிவபெருமானையும் ஒருசேர கண்டு மனமுருகி தரிசனம் செய்தனர்.