திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவடி மடத்துக்கு இன்று அதிகாலை 400 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தன. 329 சர்க்கரை காவடியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று (பிப். 7) குன்றக்குடியில் இருந்து 21 நாட்கள் பயணமாக புறப்பட்டு நத்தம் வழியாக பழனியை நோக்கி பயணத்தை மேற்கொள்கின்றனர்.
நெற்குப்பை, கண்டனுார், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கடந்த 400 ஆண்டுகளாக சர்க்கரை காவடிகளை எடுத்துச் செல்கின்றனர். இவர்கள் 21 நாட்கள் பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசித்து காவடிகளை செலுத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.
மேலும் படிக்க: தைப்பூச திருவிழா கொடியேற்றம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
அந்த வகையில், வரும் 11-ஆம் தேதி தை பூசத் தினத்தன்று பழனி செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 13-ஆம் தேதி மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடிகளை செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்கிறார்கள். அதன்பின் நடந்தே வீடு திரும்புவது இவர்களது தனிச்சிறப்பாகும். தங்களது முன்னோர்கள் சென்று வந்த பாதையிலேயே இவர்கள் இன்றளவும் கடைபிடித்து சென்று வருவது மாற்றமுடியாத வழக்கமாக உள்ளது.
அதனடிப்படையில் நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள காவடி மடத்திற்கு காவடிகள் வந்தடைந்தது. பின்னர் அதிகாலை மகேஸ்வர பூஜை நடைபெற்றது. பக்தர்கள் முன்னிலையில் காவடி சிந்து பாடப்பட்டு காவடிகள் பழனியை நோக்கி புறப்பட்டன. காவடி ஆட்டத்துடன் பக்தர்கள் பழனியை நோக்கி புறப்பட்டார்கள். நத்தம் மாரியம்மன் கோயிலில் இருந்து கிளம்பிய காவடிக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.