Thiruchendur Murugan Festival : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றத் தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழக்களில் ஒன்றான ஆவணி உற்சவ திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்து இவ்விழாவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதனை முன்னிட்டு அன்று விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், வெள்ளிப் பல்லக்கில் கொடிபட்ட வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெற்றன. இதையடுத்து கொடி மரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிலையில் ஆவணித் திருவிழாவின் 8ம் நாளான நேற்று (ஆகஸ்ட் 31) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2), காலை 6:30 மணிக்கு தேரோட்டம் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது. இதைத்தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர், வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது.
மேலும் படிக்க: உயரப் பறக்கப்போகிறது விஜய்யின் கொடி.. 100 அடி உயரத்தில் தவெக கொடிக் கம்பம்..
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் ஞானசகேரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.