Thangalaan Box Office Collection Day 2 : பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில், சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான், அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. பா ரஞ்சித்தின் படைப்பு என்றாலே, அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கும். தங்கலான் படமும் அதேபோல் இருந்தாலும், இந்தமுறை மாய உலகம், சூனியம், மன பிரம்மை என கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியான தங்கலான் படத்துக்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால், பா ரஞ்சித்தின் புதிய முயற்சி ரசிகர்களிடம் பெரிதாக எடுபட்டதாக தெரியவில்லை. முக்கியமாக படத்தில் ஆடியோ புரியும் படி இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், வசனங்கள் சரியாக புரியவில்லை, சப்-டைட்டில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதனால் நேற்று முதல் சப்-டைட்டில் இணைக்கப்பட்டுள்ளதோடு, இன்றிலிருந்து தரமான புதிய ஆடியோவும் படம் ஸ்க்ரீன் செய்யப்படவுள்ளது.
அதேநேரம், தங்கலான் படத்துக்கு முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து நில அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது தங்கலான். சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்நிலையில், தங்கலான் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் முதல் நாளில் 26.44 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது.
மேலும் படிக்க - AR ரஹ்மானுக்கு விருது..? இது ரொம்ப அவமானம்!
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் தங்கலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தங்கலான் முதல் இரண்டு நாள் கலெக்ஷன் 50 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இந்த வாரம் இறுதிக்குள் தங்கலான் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக இணைந்த பா ரஞ்சித் – சீயான் விக்ரம் கூட்டணி, தங்கலான் திரைப்படம் மூலம் மாஸ் காட்டியுள்ளது. இதனால் இதே காம்போ மீண்டும் இணைய வேண்டும் எனவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்கலானுக்குப் போட்டியாக வெளியான டிமான்டி காலனி 2, ரகு தாத்தா படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் தங்கலானுக்கு அடுத்து டிமான்டி காலனி படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.