ஐபிஎல் 2025: KKR சார்பில் 3 நட்சத்திரங்களுக்கு பெயர் பதிவு: ஜெர்சியிலும் புதிய அங்கீகாரம்!
பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அடுத்த ஒரிரு மாதம் கையில் பிடிக்க முடியாது. ஐபிஎல் 2025 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது முதலே நாள்தோறும் ஐபிஎல் தொடர்பான புதிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஜெர்சியில் தங்க நிற “கோல்டன் ஐபிஎல் பேட்ஜ்” இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்ற அணிகளாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக 3 முறை ஐபிஎல் கோப்பையினை வென்று அசத்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
மூன்று நட்சத்திரங்களுக்கு பெயர்:
ஐபிஎல் வரலாற்றில் மே 27,2012 & ஜூன் 1,2014 மற்றும் மே 26,2024 என மூன்று முறை கோப்பையினை வென்றிருந்தது கொல்கத்தா அணி. இதனை நினைவு கூறும் வகையில், பிரபஞ்சத்திலுள்ள ஜெமினி விண்மீன் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கு பெயரினை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது கொல்கத்தா அணி. 'கோர்போ(2012), லோர்போ(2014), ஜீத்போ (2024)' என மூன்று நட்சத்திரங்களுக்கு வங்காள மொழியில் பெயர் சூட்டியுள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியான நிலையில் கொல்கத்தா ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கோல்டன் பேட்ஜ்:
ஒவ்வொரு அணியும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான தங்களது ஜெர்சியினை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் கொல்கத்தா அணியும் தனது ஜெர்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக அனைத்து ஐபிஎல் தொடரிலும், அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் வெள்ளை நிற ஐபிஎல் பேட்ஜ் இருக்கும். இந்நிலையில் “நடப்பு சாம்பியன்” என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில் தங்க நிற கோல்டன் ஐபிஎல் பேட்ஜ் பிசிசிஐ சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையினை வென்ற கொல்கத்தா அணியின் ஜெர்சியில் கோல்டன் ஐபிஎல் பேட்ஜ் நடப்புத் தொடரில் இடம்பெற உள்ளது.
கொல்கத்தா அணி தங்களது ஜெர்சி அறிமுகம் தொடர்பான வீடியோவினை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட கோல்டன் ஐபிஎல் பேட்ஜூம், மூன்று முறை கோப்பையினை வென்றதை குறிக்கும் வகையில் 3 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் 2025 தொடர் தொடங்க உள்ளது.
தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும் மோத உள்ளனர். இதனிடையே கொல்கத்தா அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த அஜின்கா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயரினை அதிகாரப்பூர்வமாக நியமித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம்.
What's Your Reaction?






