சுப்ரமணிய சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்ற யானை வாகன பெருவிழா
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவின் 6 ஆம் நாள் யானை வாகன பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரமோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 20-ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி ஆகியோர் ஒவ்வொரு நாளும் மூஷிக வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம், தங்கமயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் போன்ற வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க: பங்குனிப் பெருவிழா.. அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்-தெய்வானை
இறுதியாக நள்ளிரவு ஒரு மணியளவில் உற்சவ மூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக வரசித்தி விநாயகர் கீழ் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி மலையடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மை மற்றும் மலை குகைக்கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
யானை வாகன பெருவிழாவில் இன்னிசைக் கச்சேரி, கரகாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அன்னதானம் நடைபெறும். அதிகாலை 3 மணி அளவில் மிக பிரம்மாண்டமான வானவேடிக்கை நடைபெற்றது. பின்னர் 6-ம் நாள் யானை வாகன உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
What's Your Reaction?






