தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முழக்கமிட்ட்டார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
அண்ணா அறிவாலயம் வந்த அவருக்கு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலைஞர் அரங்கில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுகிறார்.
பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மா மற்றும் சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துகளை பெறுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பல கட்சி தலைவர்களும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினர்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மு.க.ஸ்டாலின், “நாம் தொடங்கியுள்ள உரிமைப்போரில் வெற்றிதான் வரும் என்ற நம்பிக்கையை என் பிறந்தநாள் வாழ்த்தாக வழங்கிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் - நான் உழைக்க ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் உடன்பிறப்புகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி!" என்று குறிப்பிட்டிருந்தார்.
Birthday greetings to Tamil Nadu CM Thiru MK Stalin. May he lead a long and healthy life.@mkstalin
— Narendra Modi (@narendramodi) March 1, 2025