திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

Sep 23, 2024 - 08:20
 0
திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் சுவாமி  ஏழுமலையானை போன்றே மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அறிக்கை வெளியிட்டு இருந்தது. 

அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது பக்தர்களின் மனதில் காயத்தை உண்டாக்கியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண், ’’ஏழுகுண்டவாடா என்னை மன்னியுங்கள். கடந்த ஆட்சியாளர்களின் விபரீதப் போக்கின் விளைவாக சர்வ வல்லமையுள்ள, மகா புனிதமானதாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம் தூய்மையற்றதாகிவிட்டது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்த விவகாரம் தனிப்பட்ட முறையில் எனது மனதை மிகவும் பாதித்தது. 

மக்கள் நலனுக்காக போராடி வந்த எனக்கு இந்த பிரச்சனை தொடக்கத்திலேயே எனது கவனத்துக்கு வராதது வேதனை அளிக்கிறது. கலியுகக் கடவுளான பாலாஜிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரமான அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நான் ஒரு தவம் செய்ய முடிவு செய்ய உள்ளேன். 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நான் பரிகார தீட்சயை (விரதம்) தொடங்க உள்ளேன். விரதம் முடிந்து திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளேன், என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: இலங்கையில் முதல் இடதுசாரி ஆட்சி..அதிபர் அநுர குமார திசநாயகவின் வரலாறு..

மேலும் இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்வது குறித்து ஆகம விதிகளில் படி ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow