இலங்கையில் முதல் இடதுசாரி ஆட்சி..அதிபர் அநுர குமார திசநாயகவின் வரலாறு..
இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக. இடதுசாரி கொள்கையைப் பின்பற்றி அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் குறித்து விலக்குகிறது இக்கட்டுரை..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக. இடதுசாரி கொள்கையைப் பின்பற்றி அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் குறித்து விலக்குகிறது இக்கட்டுரை..
இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி நீடித்த நிலையில், அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றுள்ளார். 2-வது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையின் 9-வது அதிபர் தோ்தல் செப்.21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களித்தனர். அதன்படி சுமார் 75% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. இந்நிலையில், தொடக்கம் முதலே அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயகே முன்னிலை பெற்றார். ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், 56 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளை அநுர குமார திசநாயக பெற்றார். இதன்மூலம், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட, 10 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வாக்குகளை அவர் பெற்றார்.
அதன்படி அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இன்று (செப் 23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தற்போது நடைபெற்ற தேர்தலில் எந்த வேட்பாளர்களும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது வாக்கு எண்ணிக்கை எனப்படும் வாக்காளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன.
அதில் ரணில், நமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உட்பட தேர்தலில் போட்டியிட்ட 36 வேட்பாளர்களும் போட்டியிலிருந்து வெளியேறினர். முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அநுர குமார திஸநாயக, சஜித் பிரேமதாச இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 5,634,915 வாக்குகளுடன் அதாவது 42.31% வாக்கு சதவிகிதத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக வெற்றிப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக முன்னிலை சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் 32.76% வாக்கு சதவிகிதத்தில் இரண்டாவது இடம் பெற்றார்.
அநுர குமார திசநாயக கடந்து வந்த பாதை:
1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் கூலித் தொழிலாளியின் மகனாக அநுர குமார திசநாயக பிறந்தார். 1995 ஆம் ஆண்டில் இயற்பியல் பட்டப் படிப்பை முடித்த அவர், 1987 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியில் சேர்ந்தார்.
சீறிய சிந்தனை மற்றும் உழைப்பால் 1995 ஆம் ஆண்டில் சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார திசநாயக போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2005-ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், 2019-ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார்.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டாவது என்கவுண்டர்! .. நடந்தது என்ன?
அதே ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக போட்டியிட்டு, வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். அந்த தோல்வியில் கற்றுக் கொண்ட பாடத்தை வைத்து, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வென்று இலங்கையின் புதிய அதிபராக அநுர குமார திசநாயக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?






