ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டாவது என்கவுண்டர்! .. நடந்தது என்ன?
நீலாங்கரை அருகே ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்.
ரவுடி சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்தார் வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல்.
சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வடசென்னை ரவுடியான நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு, சிடி மணி உட்பட மொத்தம் 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை மாறி மாறி காவலில் எடுத்து, செம்பியம் தனிப்படைப் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சில தினங்களுக்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டம் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசீங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகவும், அவர் பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும் எனவும் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் போலீஸார் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில் இன்று (செப்.22) காலை ஆந்திர மாநிலம் கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை, சென்னை தனிப்படை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால், செம்பியம் தனிப்படை போலீசார், சீசிங் ராஜாவை கைது செய்திருப்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், சீசீங் ராஜாவின் குடும்பத்தினர், போலீசார் இன்று காலை அவரை கைது செய்து அழைத்துச் சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சீசீங் ராஜாவின் மனைவி, தனது கணவர் காலையில் வெளியில் சென்றார். ஆனால் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனது கணவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை. பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள், எனது கணவரை போலி என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு அரசு என் கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என தனது கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க பேசியுள்ளார். இதனிடையே, சீசிங் ராஜா மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீலாங்கரை அடுத்த பக்கிங்காம் கால்வாய் அருகே சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற அழைத்து சென்ற போது, அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளதுப்பாக்கியால் போலீசை சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்காற்புக்காக காவல் ஆய்வாளர் விமல் இரண்டு முறை சுட்டத்தில் மார்பு மற்றும் மேல்வயிறு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!
துப்பாக்கியால் சுட்டப்பிறகு குண்டு பாய்ந்து கீழே விழுந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் சிகிச்சைக்காக நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதால் பிரேத பரிசோதனைக்காக உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது என்கவுண்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?