சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான், ஆக.15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியிருந்தது தங்கலான். அதிகாரத்தின் பெயரால் பழங்குடியின மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சுரண்டல் தான் தங்கலான் படத்தின் கதை.
வழக்கமாக வடசென்னையை மட்டும் பின்னணியாக வைத்து படங்கள் இயக்கும் பா ரஞ்சித், தங்கலானை புதிய திரைமொழியில் இயக்கியிருந்தார். தொன்மங்கள், பெண் தெய்வ வழிபாடு, கனவுகள் என மக்களின் பழங்குடி தன்மையை, நாட்டுப்புற கதைகளின் பிம்பங்களுளுடன் காட்சிப்படுத்தியிருந்தார் பா ரஞ்சித். அதேபோல், இந்தப் படத்தில் காலனித்துவ விழுமியங்கள் மனிதனை சக மனிதனாக பார்க்கும் இடங்களையும் சுட்டி காட்டிய பா ரஞ்சித், அதன் கோர முகத்தையும் காட்டியிருந்தார். இதுவரை எளிய மக்களின் வாழ்வியலை தனது அடையாள அரசியல் பின்னணியில் இயக்கிய பா ரஞ்சித், இந்தமுறை பழங்குடிகள் மீதான வஞ்சனை குறித்து பேசியிருந்தார்.
பா ரஞ்சித்தின் புதுமையான திரைமொழி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன, ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தத. அதேபோல், சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், கடந்த மாதமே ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட தங்கலான், இப்போது வரை ஸ்ட்ரீமிங் ஆகவில்லை. தங்கலான் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்ததாகவும், ஆனால் தற்போது அது அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு கை மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுவே இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். அதாவது புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் இந்தப் படம் ஓடிடியில் வெளியானால், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதிகள் ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது, தங்கலான் திரைப்படம் தணிக்கை சான்று பெற்று தான் திரையரங்குகளில் ரிலீஸானது. அதனால் தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால் தங்கலான் ஓடிடி ரிலீஸ் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.