தமிழ்நாடு

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜப்தியாகும் சிவாஜி வீடு!  குடும்பத்தில் மோதல்?  பரிதாபத்தில் அன்னை இல்லம்!
ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

சென்னையின் ஹார்ட் ஆஃப் தி ஸ்பாட்களில் ஒன்றான தியாகராய நகரில் உள்ள போக் சாலையில் பிரம்மாண்டமாக காட்சித் தருகிறது மறைந்த நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, சென்னையில் கவர்னராக இருந்த ஜார்ஜ் டி போக் கட்டிய பங்களா தான், இப்போதைய அன்னை இல்லம். வறுமையில் வாடி, நாடக மேடையேறி, பின்னர் சினிமாவில் ஹீரோவாக உச்சம் தொட்டதும், சிவாஜி வாங்கிய முதல் வீடு தான் இந்த அன்னை இல்லம். தனது அப்பா சின்னையா மன்றாயர் பெயரில் வாங்கிய இந்த வீட்டுக்கு அன்னை இல்லம் என பெயர் வைத்த சிவாஜி, அதற்கேற்றபடி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

அப்போது முதல் அன்னை இல்லம் என்றால் திரையுலகில் தனியொரு மரியாதையுண்டு. ரஜினி, கமல் முதல் ஏராளமான திரை நட்சத்திரங்களின் வேடந்தாங்கலாக அன்னை இல்லம் இருந்தது எல்லாம் தனி வரலாறு. ஆனால், இன்றோ அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் நிலைக்குச் சென்றுள்ளது. சிவாஜியின் பேரன் துஷ்யந்த், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடித்த ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாகத் தெரிகிறது. இந்த கடனை துஷ்யந்த் திருப்பிக் கொடுக்காததால், தனபாக்கியம் தரப்பினர் உயர்நீதிமன்றம் செல்ல, அது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

3.74 கோடி கடன், இப்போது வட்டியுடன் 9 கோடியாக மாற, இதனால் படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிவாஜியின் பேரன் துஷ்யந்தோ, படம் இன்னும் முடியவில்லை எனக் கூறி நீதிமன்றம் சொன்னபடி உரிமையை கொடுக்கவில்லை. இதுவே தற்போது அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு சென்றுள்ளது. நடிப்பில் கொடி கட்டி பறந்த சிவாஜி, ஒருசில படங்களை தயாரித்துப் பார்த்தார். ஆனால் தயாரிப்பில் நஷ்டம் ஏற்படவே, அதன்பின்னர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். 

அதேநேரம், சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்திற்கு சில கடன் நெருக்கடிகள் ஏற்பட, பிரபு, ராம்குமார் கேட்டுக்கொண்டதால் சந்திரமுகி படத்தில் நடித்துக்கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன்பின்னரே அன்னை இல்லத்தில் மீண்டும் வெளிச்சம் பிறந்தது. இந்த நிலையில், சிவாஜியின் பேரன் துஷ்யந்தால் மொத்த குடும்பமும் அப்செட்டில் இருக்கிறதாம்.

சிவாஜிக்குப் பிறகு பிரபுவும் அவரது மகன் விக்ரம் பிரபுவும் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகின்றனர். ஏறகெனவே ராம்குமார் - பிரபு இடையே சொத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு இருப்பதாக கூறப்படும் நிலையில்  ஜப்தி, ஏலம் என அன்னை இல்லம் சந்தித்து வரும் பஞ்சாயத்துகள், கோலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவாஜியின் அன்னை இல்லம் தற்போது பிரபுக்கு சொந்தமானது என அவர் தெரிவித்துள்ளது, ரசிகர்களை கொஞ்சம் நிம்மதியடைய வைத்துள்ளது. சிவாஜி கடைசியாக நடித்த திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த சிவாஜி, தனது வீட்டையும் சொத்தையும் பிரிக்க மனமில்லாமல், தம்பி மணிவண்ணனுக்கு கொடுத்துவிட்டு வெளியேறுவார். அப்போது தான் ஆசையாக கட்டிய வீட்டின் வெளியே, தூணில் சாய்ந்தபடி உயிரிழப்பதே சிவாஜி நடித்த கடைசி சீன். தெரிந்தோ தெரியாமலோ சிவாஜி நடித்த இந்த காட்சி, இப்போதுவரை மீம்ஸ் டெம்ப்ளேட்டாக வலம் வருகிறது. ஆனால், அது இப்போது சிவாஜியின் அன்னை இல்லத்துக்கே சுத்தி வந்து நிற்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.