CM Stalin: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... தமிழக நிதி குறித்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள அவர், தமிழகத்திற்கு தேவையான நிதிகளை ஒதுக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

Sep 26, 2024 - 22:56
 0
CM Stalin: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... தமிழக நிதி குறித்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சென்னையில் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நிதி ஒதுக்க தமிழக அரசு பலமுறை கேட்டுக்கொண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதேபோல், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  

இதுகுறித்து பலமுறை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிப்பது குறித்து, பிரதமர் மோடியை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். 

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள், தமிழக அதிகாரிகளும் மோடியை சந்திக்க செல்கின்றனர். இந்தச் சந்திப்பின் போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க கோரிய மனுவை அவர் அளிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்தப் பயணத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மாலையே அவர் சென்னை திரும்புகிறார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow