குணால் கம்ரா விவகாரம்.. சிவசேனா ஆதரவாளர்கள் செய்த பகீர் செயல்
சிவசேனா ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக் கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான (Standup comedian) குணால் கம்ரா சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவர் ‘துரோகி’ என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலான நிலையில் இது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குணால் கம்ரா செயலால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் மும்பையில் நிகழ்ச்சி நடந்த இடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டல் மற்றும் ஸ்டுடியோவை சேதப்படுத்தினர்.
மகாராஷ்டிரா முதல்வர் கண்டனம்
நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்திற்கு குணால் கம்ரா மன்னிப்பு கேட்டாக வேண்டும்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த இதுமாதிரியான கீழ்தரமான காமெடிகள் சரியானது அல்ல” என்று கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், குணால் கம்ரா மீது சிவசேனா தொண்டர்கள் பலர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
கழிப்பிடத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஏக்நாத் சிண்டேவின் ஆதரவாளர்கள் குணால் கம்ராவின் புகைப்படத்தை பொதுக்கழிப்பிடத்தின் வெளியில் ஒட்டி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, “கம்ரா நகைச்சுவை என்ற பெயரில் தவறான கருத்தை பரப்புகிறார். அவரது மோசமான மனநிலையை எதிர்த்து நாங்கள் அவரது படத்தை இங்கே ஒட்டியுள்ளோம்” என்று தெரிவித்தனர். மேலும், குணால் கம்ராவிற்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.
What's Your Reaction?






