சீமை கருவேல மரங்கள்... நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை- ஐகோர்ட் வேதனை
அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சீமை கருவேல மரங்கள்
அப்போது தமிழக அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 37 மாவட்டங்களில் 738 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2025ஆம் ஆண்டு ஜனவரி வரை சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு சிறப்பு ப்ளீடர் சீனிவாசன் தெரிவித்தார்.
Read more: போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு...அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு பணத்தை செலவிடுவது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த பணிகளை தனியாருக்கு வழங்கும் பட்சத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.மேலும் 2015ஆம் ஆண்டு முதல் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எந்த உத்தரவும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
நீதிபதிகள் வேதனை
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பொது ஏலம் விடும்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டும் அதையும் அமல்படுத்தவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது பொது ஏலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசு தகுந்த பதிலை அளிக்க தவறினால் நீதிமன்றமே பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டி வரும் எனவும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?






