நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்த சிக்கல்.. சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழுத சிஷ்யர்கள்

ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Mar 24, 2025 - 11:16
 0
நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்த சிக்கல்.. சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழுத சிஷ்யர்கள்
சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழுத சிஷ்யர்களால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசிப்பவர் மருத்துவர் கணேசன். இவர் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு  எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஸ்யராக இருந்து வந்துள்ளார். அதே சமயம் அவர் மீது கொண்ட அதீத நம்பிக்கை, ஆன்மிக ஈடுபாடு காரணமாக அவருக்கு சொந்தமான கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தையும் சேத்தூர் மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 37 ஏக்கர் நிலத்தையும் சுவாமி நித்தியானந்தர் தியான பீடத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நித்தியானந்தா மடத்தில்  பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெறுவது குறித்து அறிந்த மருத்துவர்  கணேசன்  நித்தியானந்தர் தியான பீடத்திற்கு தானமாக வழங்கிய இடத்திற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து 40 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும்   தனது நிலத்தினை மீட்கும் பொருட்டு அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டாக   திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். 

வழக்கு விசாரணையில் நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை பவர் ஏஜென்ட் சந்திரன் நிலத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது. மேலும் நித்தியானந்தரின் ஆசிரமமும் செயல்படகூடாது  என உத்தரவு பிறப்பித்தது.  தொடர்ந்து, அங்கு ஆசிரமம் கட்டி வாழ்ந்து வரும் சிஷ்யர்களை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக இரு வேறு ஆசிரமங்களிலும் தங்கியிருந்த நித்தியானந்தரின் சிஷ்யைகளை வெளியேற்ற  தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவேறு ஆசிரமத்திற்கும் சென்றனர். அப்போது சிஷ்யைகள் ஆசிரமத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி ஆசிரமத்தின் அறைகளை உள்பக்கமாக பூட்டி  கொண்டு  அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும்  சம்பவ இடத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு நாட்களுக்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிவிட்டு சென்றனர். தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கொடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி பிரித்தி தலைமையிலான காவல்துறையினர் சர்ச்சைக்குரிய கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் மலை அடிவாரம் ஆகிய இரு வேறு இடத்திற்கு சென்று ஆசிரமத்தில் தங்கியிருந்த பரமஹம்ச நித்தியானந்தரின் சீடர்களை  வெளியேற்றினர்.

இதனை அடுத்து அமைதியான முறையில் வெளியேறிய சீடர்கள் நேற்று இரவு 12 மணி அளவில் சேத்தூர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள ஆசிரமத்திற்கு மீண்டும் சென்று பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டினை உடைத்து உள்ளே சென்றனர். தானமாக வழங்கிய நிலம் தங்களது நிலம் எனவும் அதனை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் பிடுங்கி தங்களை வெளியேற்றுவதாக  இருட்டான அறைக்குள் அமர்ந்தவாறு சிவலிங்கத்தினை கட்டிப்பிடித்து பரமஹம்ச நித்தியானந்தருக்கும் தங்களுக்கும் அநீதி நடந்ததாக கூறி அழுது புலம்பும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அறிந்த சேத்தூர் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி உள்ளே இருந்த சிஷ்யைகளையும், சீடர்களையும் வெளியேற்றினர். இந்தச் சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow