தமிழ்நாடு

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!
Exit Polls
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) நாளை மாலை வெளியாக உள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நாளை மாலை வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், நாளை மாலை 6:30 மணிக்கு மேல் முடிவுகளை வெளியிடத் தயாராகி வருகின்றன பல்வேறு செய்தி நிறுவனங்கள்.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி விதிமுறை

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைவதால், அதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழல்

ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர்களிடம் விரிவான கருத்துக்கணிப்புகளை எடுத்து வைத்துள்ளன. தமிழகத்தில் 85% என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், இந்த அதிகப்படியான வாக்குகள் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்ற விவாதம் அனல் பறக்கிறது. நாளை மாலை வெளியாகும் முடிவுகள், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையுமா அல்லது புதிய மாற்றம் ஏற்படுமா என்பதற்கான ஒரு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.