தமிழ்நாடு

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!
Vijay Staying in London : The Shard Hotel
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் தங்கியுள்ள ‘தி ஷார்ட்’ கட்டிடத்தில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டலின் ஆடம்பர வசதிகள் மற்றும் வாடகை கவனம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளைத் தேடி லண்டன் சென்றிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அரசு முறைப் பயணமாக ஆறு நாட்கள் அங்கு முகாமிடும் அவர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இந்தச் சூழலில், லண்டனில் அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் இடம் கவனம் பெற்றுள்ளது.

லண்டனின் வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான ‘தி ஷார்ட்’. லண்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் ஒரு பகுதியில்தான், விஜய் தங்கி இருக்கும் இந்த ஷாங்க்ரி-லா ஹோட்டல் இயங்கி வருகிறது. கட்டிடத்தின் 34-வது தளத்தில் தொடங்கி மேல்தளங்கள் வரை ஹோட்டல் அமைந்துள்ளன.

‘தி ஷார்ட்(The Shard)’ கட்டிடம் மொத்தம் 52 தளங்களைக் கொண்டது. ஐரோப்பாவின் உயரமான கட்டிடங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தக் கட்டிடம், லண்டன் நகரின் ஸ்கைலைனில் தனித்த அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

ஜன்னலைத் திறந்தால்... லண்டன்!
இந்த ஹோட்டலின் அறைகளில் தங்குபவர்களுக்கு கிடைக்கும் முக்கிய அனுபவம், நகரத்தின் பிரம்மாண்டமான காட்சிதான். உயரமான தளங்களில் இருந்து தேம்ஸ் நதி உள்ளிட்ட லண்டனின் முக்கிய பகுதிகளைப் பார்க்க முடியும். பகல் நேரத்தில் நகரத்தின் பரபரப்பையும், இரவில் ஒளிரும் லண்டனையும் மேலிருந்து ரசிக்கக்கூடிய வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹோட்டலில் பல்வேறு வகையான அறைகள் உள்ளன. வழக்கமான அறைகளுடன் உயர்தர டீலக்ஸ் அறைகள் மற்றும் பிரத்யேக வசதிகளைக் கொண்ட அறைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் தங்கும் அறை மட்டுமல்ல... முழு ‘லக்சரி’ அனுபவமே இங்கே கிடைக்கும் என்கிறார்கள். விதவிதமான உணவு வகைகளை வழங்கும் உணவகங்கள், பிரத்யேக நிகழ்ச்சிகளுக்கான இடங்கள், நிறுவனக் கூட்டங்களுக்கான வசதிகள் என ஹோட்டலுக்குள் பல்வேறு ஏற்பாடுகள் உள்ளன. உயரமான தளத்தில் அமைந்துள்ள நீச்சல் குளமும் இந்த ஹோட்டலின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இதன் அறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. அறையின் வெப்பநிலை மற்றும் விளக்குகளை கட்டுப்படுத்தும் வசதி, தானியங்கி திரைகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக ஹோட்டல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டணம் கேட்டால் தலை சுற்றும்!
இப்போது முக்கியமான கேள்வி. இப்படிப்பட்ட இடத்தில் ஒரு இரவு தங்கினால் எவ்வளவு செலவாகும்? என்பதுதான்.
அறையின் வகை மற்றும் முன்பதிவு காலத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும் நிலையில், ஹோட்டல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 ஆயிரம் முதல் ரூ.2.70 லட்சம் வரை செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. வரி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் இதற்கு மேல் இருக்கலாம்.

இதற்கிடையே, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க லண்டனில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் ஹோட்டலுக்கு வெளியே தமிழர்கள் காத்திருக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
வரும் 15-ம் தேதி லண்டன் தமிழர்களை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சில்வர்ஸ்டோனில் இன்னொரு நிகழ்ச்சி!
முதலீட்டுச் சந்திப்புகளுக்கு இடையே, விஜய்யின் பயணத்தில் அஜித்தின் கார் ரேஸ் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் விஜய் பங்கேற்கிறார். அங்கு போட்டியைத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்குத் தொடங்கும் பந்தயம், இரவு 11.45 மணியளவில் முடிவடைய உள்ளது.
முதலமைச்சரின் லண்டன் பயணத்தின் பிரதான நோக்கம் முதலீடுகளை ஈர்ப்பதுதான் என்றாலும், அவர் தேர்வு செய்திருக்கும் தங்குமிடம் முதல் தமிழர்களுடனான சந்திப்பு, சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் வரை... விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் பல்வேறு காரணங்களால் பேசுபொருளாகியுள்ளது.