தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதி vs அரசாணை ! தங்கம், பட்டுப்புடவை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தில் சர்ச்சை !

8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட வருமான வரம்புக்கும் அரசாணையில் இடம்பெற்றுள்ள வரம்புக்கும் இடையிலான மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குறுதி vs அரசாணை ! தங்கம், பட்டுப்புடவை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தில் சர்ச்சை !
Annam Seer Scheme: Who Can Benefit?

திருமணம் என்பது பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான தருணம். அந்த நேரத்தில் அவர்களுக்கு அரசே ‘அண்ணன்’ போல் துணை நிற்கும் வகையில் 8 கிராம் தங்க நாணயமும், பட்டுப்புடவையும் வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டத்துக்கான அரசாணை வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள வருமான வரம்பு தொடர்பான விவரம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘அண்ணன் சீர்’ திட்டம்... ரூ.812 கோடி ஒதுக்கீடு :

தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடைய பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் வகையில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து நடைபெறும் தகுதியான திருமணங்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமானது... வருமான வரம்பு !

திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு தற்போது கவனம் பெற்றுள்ளது.

அரசாணையில், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கே திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான முழுமையான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி சொன்னது என்ன ?

இதுதான் தற்போது அரசியல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள முக்கியமான அம்சம்.

தவெக தேர்தல் அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கமும், பட்டுச்சேலையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள அரசாணையில் அந்த வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட வரம்புடன் ஒப்பிடும்போது, அரசாணையில் தகுதி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ரூ.5 லட்சம்... ரூ.2.5 லட்சம்... ஏன் இந்த மாற்றம் ?

தேர்தல் நேரத்தில் ஒரு வருமான வரம்பு அறிவிக்கப்பட்டுவிட்டு, திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வேறு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களில் திருமண வயதில் உள்ள பெண்கள் இத்திட்டத்தின் பலனைப் பெற முடியாத நிலை உருவாகலாம் என்ற அச்சமும் முன்வைக்கப்படுகிறது.

அதே நேரத்தில், அரசின் தரப்பில் திட்டத்திற்கான தகுதி மற்றும் நடைமுறைகள் தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்பட வேண்டியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

8 கிராம் தங்கம்... எப்படி கொள்முதல் செய்யப்படும் ?

தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ஆகியவை திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி முறையில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பிறகு கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தங்க நாணயத்தின் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலையில் இந்திய புல்லியன் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கம் (IBJA) நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தாலிக்கு தங்கம்’ திட்டமா... புதிய பெயரா ?

கடந்த கால திமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த "தாலிக்கு தங்கம்" திட்டத்துடன் தற்போதைய ‘அண்ணன் சீர்’ திட்டத்தை ஒப்பிட்டு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணச் செலவுக்கு உதவும் வகையில் அரசின் திருமண உதவித் திட்டங்கள் முக்கியப் பங்கு வகித்த நிலையில், புதிய திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பெண்கள் மத்தியில் அதிருப்தியா ?

தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது அவற்றின் தகுதி வரம்புகள் மாற்றப்படுவது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக, திருமண உதவி, இலவச மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளைச் சுற்றி ஏற்கெனவே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் வருமான வரம்பும் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

“வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படுமா ?”

தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நோக்கமும், அவை நடைமுறைக்கு வரும் விதமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

‘அண்ணன் சீர்’ திட்டத்தில் 8 கிராம் தங்கமும் பட்டுப்புடவையும் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வருமான வரம்பிலேயே திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

“வாக்குறுதியில் அறிவித்ததை முழுமையாக வழங்காமல், ஒவ்வொரு திட்டத்திலும் ஏதேனும் ஒரு வரம்பை குறைப்பது ஏன்?” என்ற கேள்வியும் பெண்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது.

அதனால், ‘அண்ணன் சீர்’ திட்டம் பெண்களுக்கு உண்மையான திருமண உதவியாக மாறுமா? அல்லது தகுதி வரம்பால் பயனாளிகளின் எண்ணிக்கை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.

அரசின் அடுத்தகட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியான பிறகே இதற்கான முழுமையான தெளிவு கிடைக்கும்.