மக்களே உஷார்...மீண்டும் தொடங்கப்போகுது மழை ஆட்டம்! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

மக்களே உஷார்...மீண்டும் தொடங்கப்போகுது மழை ஆட்டம்! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Author: Bhavani v தமிழ்நாடு

நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து புயல்கள் உருவானபோதிலும், தமிழகத்துக்குப் போதிய மழைப்பொழிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், அக்வான் புயலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழையைக் கொடுக்காமல் ஆந்திரா - ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடந்துள்ளது.

வலுவிழந்த அக்வான் புயல்!

கடந்த நவம்பர் 19ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய அக்வான் (Akvan) தீவிரப் புயல், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுவிழந்தது.

தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த இந்தப் புயல், காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையைக் கடந்தது.

இதையடுத்து வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்த புயல், அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?

இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22: 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

நாளை (நவம்பர் 22) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் இதர தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.

நவம்பர் 23: 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை!

நவம்பர் 23ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 24: கனமழை எச்சரிக்கை நீடிக்கும்!

நவம்பர் 24ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

இதுதவிர, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையின் வானிலை எப்படி இருக்கும்?

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.