வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் லட்சத்தீவு பகுதியிலிருந்து வட தமிழகம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தும் விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பள்ளி மாணவர்கள், நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கே இன்ஸ்டாகிராமில் மெசேஜ் மழை பொழியத் தொடங்கிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குப் படையெடுத்த மாணவர்கள், தங்களுக்கே உரித்தான பாணியில் மிகவும் பாசமாகவும் பாவமாகவும் மெசேஜ்களைத் தட்டியுள்ளனர்.
ஒரு மாணவன், "சார்... மழை பயங்கரமா பெய்யுது, யூனிஃபார்ம் எல்லாம் ஈரமா இருக்கு! கொஞ்சம் உங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க சார், மழை நிலவரம் தெரியும்... ப்ளீஸ் லீவ் கொடுங்க!" என்று உருகியுள்ளார்.
மற்றொரு மாணவனோ ஒரு படி மேலே போய், "நாங்க பாவம் சார்... நாளைக்கு வேற மேக்ஸ் எக்ஸாம் இருக்கு, தயவுசெஞ்சு லீவு விடுங்க சார்!" எனக் கண்ணீர் எமோஜிகளை அள்ளித் தெளித்துக் கெஞ்சியுள்ளார். இன்னும் சிலர் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதையும், மின்னல் அடிப்பதையும் சுட்டிக்காட்டி விடுமுறை அறிவிக்க கோரியுள்ளனர்.
மாணவர்களின் இந்த மெசேஜ்களைக் கண்டு ரசித்த ஆட்சியர் பிரதாப் முருகன், கோபப்படாமல் அவற்றைச் சுவாரசியமான பின்னணி இசையோடு சேர்த்து ஒரு 'ரீல்ஸ்' வீடியோவாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆட்சியர் பதிவிட்ட இந்த நகைச்சுவையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, மாணவர்களின் இந்த 'இன்ஸ்டா மனுக்கள்' நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துச் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது.
LIVE 24 X 7









