கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனத்தில் சுமார் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நகராட்சி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனிநீதிபதி அமர்வு, கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தன் உரிமையைப் பாதிப்பதாகக் கூறி, அதை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நேரு தரப்பில், "முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவைத் தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது" என்றும், "தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்" என்றும் வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், "ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும் முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நேருவைப் பாதுகாத்தது; நீதிமன்றம் அளித்த அவகாசத்தைப் பயன்படுத்தாமல் தற்போது இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை அக்டோபர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யப் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய மறுத்து, கே.என்.நேருவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதன் மூலம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்வதற்கு இருந்த தடை நீங்கி, நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









