தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாகக் கூறி தனியார் பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்!
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் விசாரித்தார்.
மனு மீதான விசாரணையின்போது, அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணைக்கு அவரது காவல் விசாரணை அவசியம் என்றும் போலீஸார் தரப்பில் வாதிடப்பட்டது.
அன்பில் மகேஷுக்கு எதிராக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது என்ன?
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரின் உறவினர்கள் அன்பில் மகேஷை அணுகியபோது, முத்துக்குமார் பாதுகாப்பாக இருப்பதாகவும், உரிய நேரத்தில் திரும்பி வருவார் என்றும் அவர் தெரிவித்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சப் பணம் அன்பில் மகேஷிடம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.
முன்ஜாமீன் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!
இதையடுத்து, வழக்கின் ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அக்டோபர் 26-ம் தேதி அறிவிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக். 26) மனு மீதான தீர்ப்பை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.
ரூ.100 கோடி தனியார் பள்ளிகள் அங்கீகார முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
LIVE 24 X 7









