பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை... திமுகவுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த தவெக!

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை... திமுகவுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த தவெக!

பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: Bhavani தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த திமுக, சில போலி பதிப்பகங்களின் நூல்களில் மட்டுமே ஜூன் மாத முத்திரை இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுகள் (அக்டோபர் 9) வெளியான பிறகு, தவெக தலைவரும், டம்மி முதலமைச்சருமான விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வெளியாகியிருக்கும் பதிவு, 'அடடே, இந்தப் பொம்மை பேசுமா?' என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

விலைவாசி உயர்வு குறித்து எந்தப் பதிவும் இல்லை. கொலைகள் குறித்து கவலையில்லை. காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்பும் இல்லை. மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்தப் பதிவும் இல்லை. அரசின் அலட்சியத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்துக்கூட எந்தப் பதிவும் இல்லை.

ஆனால், திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகத்துக்குச் சென்றதும், அவருக்குக் கிடைத்த பாராட்டுகள் பேசுபொருளானதும், புத்தகக் கொள்முதலில் ஊழல் என்று தவெக தலைவர் ஓடிவந்திருக்கிறார்.

பெரியார் அறிவுலகத்தில் உள்ள அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்களில் மட்டுமே ஜூன் மாத முத்திரை இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள தோழர்கள் தெரிவிக்கின்றனர். அந்தத் தேதிகூட டம்மி முதல்வரின் பிறந்தநாள்தான்.

அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள 'வால்காவிலிருந்து கங்கை வரை' போன்ற புகழ்பெற்ற நூல்கள் உள்ளிட்ட பிற பதிப்பகங்களின் புத்தகங்களில் திமுக ஆட்சிக் காலத்தின் மார்ச் மாத முத்திரை இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால், போலி பதிப்பகங்களின் புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? அதற்கு யார் முடிவெடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்குக் கமிஷன் சென்றது?

கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்கான புத்தகங்கள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்யப்பட்டன என்பது பதிப்பாளர்களுக்கே தெரியும்.

திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த ஓர் எழுத்தாளர், தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற 'எழுத்தாளர்களின்' பெயர்களையும் பார்த்துப் பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரியவந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல்தான் டம்மி முதல்வர் அறிக்கை வெளியிட்டாரா?”

என்று திமுக தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தது.

ஆதாரங்களை வெளியிட்டு தவெக பதிலடி!

திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக தரப்பு கொள்முதல் ஆணைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ”பீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்குத் தெரியாது என்பதுபோல திமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் என்று விமர்சித்துள்ள தவெக தரப்பு, திமுகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க ஆதாரங்களை வெளியிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பீனிக்ஸ் பதிப்பகத்துக்கான புத்தகக் கொள்முதல் ஆணை திமுக ஆட்சிக் காலத்திலேயே அனுப்பப்பட்டதாகக் கூறி அதற்கான ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது.

அதேபோல், அகல் விளக்கு பதிப்பகத்துக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புத்தகக் கொள்முதல் ஆணைக்கான ஆதாரத்தையும் பகிர்ந்துள்ளது. அந்த ஆவணத்தில், ந.க.எண்: 7781/எ1/2025 என்றும், நாள்: 14.02.2026 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல திமுகவினர் வேடமிடுவதாக விமர்சித்துள்ள தவெக தரப்பு, திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு இனி ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது”.

இவ்வாறு பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் திமுகவும் தவெகவும் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.