சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் பதில்கள் பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்திற்குப் பதிலாக, பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி செலவில் 15 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக அங்குள்ள பாழடைந்த பழைய குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரியிருந்தது. ஆனால், பழைய குடியிருப்புகளை இடிக்க திட்டமிட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்பு காரணங்களுக்காக முடிவெடுக்கப்பட்டதாக தமிழக அரசின் தகவல் நம்பக தன்மை பிரிவு தெரிவித்தது.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொதுப்பணித்துறையிடம் சில கேள்விகளை எழுப்பினார்:
புதிய தலைமைச் செயலகத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டதா?
திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ரூ.1,200 கோடி மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆவணங்கள் எங்கே?
இந்த மனுவுக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக எந்தவொரு சாத்தியக்கூறு அறிக்கையோ அல்லது திட்ட ஆவணங்களோ தங்களிடம் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் கட்டடங்களை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் அடிப்படைத் திட்ட ஆவணங்களே இல்லை என்று அரசுத் துறை தெரிவித்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கிடையே, வாழ்வாதாரம் மற்றும் கடலுக்குச் செல்லும் வழி பாதிக்கப்படும் எனக் கூறி பட்டினப்பாக்கம் மற்றும் நோச்சிக்குப்பம் உட்பட 9 மீனவ கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஆமைகள் முட்டையிடும் கடற்கரை மண்டலம் என்பதால் இக்கட்டுமானத்திற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர். முறையான திட்ட அறிக்கைகள் குறித்த தெளிவான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
LIVE 24 X 7









