தமிழ்நாடு

கேரளத்தில் 8 மாணவர்கள் பலியான சம்பவம்.. போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம்!

திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விபத்தில் பலியான விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளத்தில் 8 மாணவர்கள் பலியான சம்பவம்.. போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம்!
Car Accident
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் திண்டுக்கல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 8 பேரின் உயிரைப் பறித்த கோர விபத்து விவகாரத்தில், தற்போது புதிய மற்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல் மாதிரிகளைச் சோதித்த முதற்கட்ட தடயவியல் ஆய்வில், அவர்கள் மது அருந்தியிருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விரிவான மற்றும் இறுதி அறிக்கையைப் பெறுவதற்காக, அந்த உடல் மாதிரிகள் காக்கநாடு கெமிக்கல் எக்ஸாமினேஷன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வக அறிக்கை வெளியான பிறகே இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்.

இதனிடையே, விபத்து நடப்பதற்கு முன்பாக தளிக்குளம் பத்தாம் கல் பகுதியில் அறை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக மாணவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதல் குறித்து அங்கிருந்தவர்கள் வாடானப்பள்ளி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் தங்களை நோக்கி வருவதையறிந்த கல்லூரி மாணவர்கள் 8 பேரும், காவல் துறையிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசிடமிருந்து தப்பிக்க காரை அதிவேகமாக இயக்கி வந்ததே கைப்பமங்கலம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்திற்கு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.