தமிழ்நாடு

சாம்பாரில் சாணிப் பவுடர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. இப்படியா பழிவாங்குறது?

ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பாரில் சாணிப் பவுடர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. இப்படியா பழிவாங்குறது?
Cow Dung Powder
சத்தியமங்கலம் அருகே உள்ள ராம பையலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 51 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட சாம்பாரின் தரத்தை அறிய ஆசிரியர் ரேவதி அதனைச் சுவைத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் வழக்கத்திற்கு மாறாகக் கசப்புத் தன்மை இருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தலைமை ஆசிரியர் குமுதாவிடம் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியரின் புகாரின் பேரில் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சாம்பாரில் மஞ்சள் நிறம் அதிகமாக இருந்ததால், முதலில் சமையலர் பொன்னம்மாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் அதிகளவில் மஞ்சள் தூள் சேர்க்கவில்லை எனக் கூறிய நிலையில், ஆசிரியர் சுவைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிதளவு சாம்பாரில் மட்டும் சாணிப் பவுடர் கலக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமானது.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவர், பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரைத் தூண்டிவிட்டு ஆசிரியர் சாப்பிடும் சாம்பாரில் சாணிப் பவுடரைக் கலக்க வைத்தது தெரியவந்தது.

இந்த செயலுக்குப் பின்னணியில் இருந்த காரணம் குறித்துப் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது: ஆறுமுகத்தின் மனைவி ஆலம்மாள் ஏற்கனவே அந்தப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் சமையலராகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் சரியாகச் சமைக்காத காரணத்தால், அவரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை நிர்வாகம் நியமித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், பழிவாங்கும் நோக்கில் மாணவியைப் பயன்படுத்தி இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ஆறுமுகத்தைக் கைது செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.